தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்த நிலையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்தது. இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஆனால் திற்பரப்பு அருவியில் நேற்று முன்தினம் படகுசவாரி நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு சவாரி நடத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கும், கடையல் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் புகார்கள் சென்றுள்ளது. இதனை அடுத்து நேற்று காலையில் கடையல் பேரூராட்சி அலுவலர் படகு சவாரிக்கு தடை விதித்தார். இதைத்தொடர்ந்து படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து மூன்றாவது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்படி நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.12 அடி இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 707 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 916 கனஅடி தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்ற பட்டுள்ளது.