தமிழக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் பொது தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் பெரும் தாக்கம் ஓரளவு குறைந்ததையடுத்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாதம் துவக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையும், அதற்கான பாடத் திட்டங்களை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் அனைவர் மத்தியிலும் வலுத்து வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் இருக்கும் வகையில் வகுப்பறைகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறை உள்ளது. இந்த சூழலில் மாணவ மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது ஏற்புடையதாக இருக்காது.
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.