மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஒரு உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இறந்தவர் உடலை காவல்துறையினர் மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, இறந்தவர் மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவை சேர்ந்த முருகேசன்-லட்சுமி தம்பதியினரின் மகன் மணிமாறன் ஆவார். இதில் மணிமாறன் தினசரி மது குடித்துவிட்டு தாய் –தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று நேற்று நள்ளிரவு மணிமாறன் குடித்து விட்டு தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் கட்டையை எடுத்து அவரை அடித்ததாக தெரிகிறது. அதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மணிமாறனை, பெற்றோர் சாக்குமூட்டையில் கட்டி வைகை ஆற்றங்கரையோரம் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகனை கொன்று எரித்த பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.