நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படியும், அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் தான் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் அதுவரை எந்த பள்ளியிலும் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாகவும், கல்விக்கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கட்டணம் செலுத்தும் படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இணைய வழியில் மாணவர் சேர்க்கை தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.