பீகார் மாநிலம் ராஜா பகுதியில் ஜனதா குமார் மற்றும் நிக்கி தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் பியூஸ் குமார் மற்றும் 10 வயதில் ராஜா குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளியில் சிறுவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் சிறுவர்கள் இரண்டு பேரும் மாலை நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் பிளாஸ்டிக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் ராஜகுமார் தனது கழுத்தில் பிளாஸ்டிக் கயிற்றை போட்டு குதித்தபோது எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் கயிறு கழுத்தை இறுக்கியுள்ளது.
அதனால் சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.