முகமது ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டால் எப்படி ஆசிய கோப்பையை வெல்ல முடியும் என்று சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி..
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இடமும், 2ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று கடைசி போட்டியாக ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய அணி. எனவே இந்த போட்டியிலாவது வென்று ஆறுதல் வெற்றியுடன் செல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..
லீக் சுற்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் அற்புதமாக ஆடி வென்ற இந்திய அணியை கண்டிப்பாக ஆசியக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பட்ட நேரத்தில் சூப்பர் 4 சுற்றில் அணியில் பல மாற்றங்களை செய்து தேவையில்லாத தோல்வியை சந்தித்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி விலகியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, எப்போதுமே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் சுழல் பந்துவீச்சாளர்களை விடவும் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து அங்கு ஆடுவது அவசியம்.. இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆசிய தொடரில் பயணித்தது தான் மிகப்பெரிய தவறு.. அதுமட்டுமில்லாமல் முகமது சமி டி20 கிரிக்கெட்டில் அற்புதமாக பந்துவீசி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் முகமது ஷமி.
சிறப்பாக பந்து வீசி வந்த அவரை டி20 அணியில் இருந்து தொடர்ச்சியாக நீக்கி வாய்ப்புகளை வழங்காமல் இருந்து வந்தது மிகப்பெரிய தவறு.. ஏனென்றால் ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டு வெறும் 3 வேகப்பந்து பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு ஒரு பெரிய தொடருக்கு பயணிப்பது தவறான முடிவு. இந்த விஷயத்தில் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேசியிருக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்றால் அணி முதலில் சிறப்பாக தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்..
அதாவது, துபாய் போன்ற மைதானங்களில் வேகப்பந்துவீச்சாளர்களின் தேர்வை சிறப்பாக செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் இது போன்ற அணியத் தேர்வு செய்தால் எப்படி வெல்ல முடியும் என்று ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது..