கனடாவில் தடுப்பூசி செலுத்திய நபருக்கு அரிதான ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திய நபருக்கு முதன் முறையாக அதிக ஆபத்தான ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கியூபெக் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாதிக்கப்பட்ட நபர் ஒரு பெண் என்றும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி பிரச்சனைகளை துல்லியமாக கண்காணித்து வருவதாகவும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்டுள்ள பெண் இந்திய தயாரிப்பான அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.