மதுபான கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வசித்துவரும் வெங்கடேச பெருமாள் இவருக்கு சொந்தமான மொத்த விலை மதுபான கடையானது காரைக்கால் சர்ச் வீதியில் உள்ளது. இந்த கடையை நாகராஜ் என்பவர் நடத்தி வந்த நிலையில் வெங்கடேச பெருமாளுக்கும் நாகராஜுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெண் தாதா எழிலரசியும் அவருடைய கூட்டாளிகள் திரிலோக சந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய கும்பல் நாகராஜ் ஆதரவாக வெங்கடேச பெருமாளிடம் சென்று நாகராஜுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனே ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வெங்கடேச பெருமாள் காவல் நிலையத்தில் புகாரளிக்க அதனடிப்படையில் காரைக்கால் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து இந்த கொலை மிரட்டலுக்கு காரணமான நாகராஜ் மற்றும் அவரின் ஆதரவாளர்களான பாலமுருகன், திரிலோக சந்திரன் போன்றோரை கைது செய்துள்ளனர். ஆனால் கொலை மிரட்டலில் முக்கிய நபரான பெண் தாதா எழிலரசி தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தாதா எழிலழரசி குண்டர் சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளிவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.