முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறப்பு டிஜிபி முன்னாள் போலீஸ் சூப்பிரண்ட் ஆகிய இரண்டு பேரும் ஆஜராகவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட விக்கிரவாண்டி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடியை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சாட்சி அளித்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த புஷ்பராணி விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதற்கிடையில் பெண் போலீஸ் அதிகாரி சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.-பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஆடியோ உரையாடல், வாட்ஸ்-அப் மெசேஜ் ஆகியவை திடீரென மாயமாகி இருந்தது. இதனை அறிந்த நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். மாயமான ஆவணங்களின் நகலை வருகிற 25-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.