பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலையராதினிபட்டி கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் உங்கள் ஏ.டி.எம். கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தால் ஏ.டி.எம். கார்டு மீண்டும் செயல்படும் என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய மேகலா ரகசிய குறியீட்டு எண்ணை அந்த மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் மேகலாவின் வங்கியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்ததாக செல்போனிற்கு குறுச்செய்தி வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேகலா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எட்டு ஸ்ரீதரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் மேகலா கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொண்டு பணம் திருடிய மர்ம நபரிடம் இருந்து பணத்தை கைப்பற்றி நேற்று காலை 8 மணி அளவில் மேகலாவின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை உடனடியாக மீட்டுக்கொடுத்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.