ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வெய்ன் 54 வயதாகும் இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர் ஆவார். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ரமேஷுக்கு ஒடிசா மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ரமேஷ் 1982 ஆம் ஆண்டு 2வது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் ரமேஷ் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதன் பின்னர் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு ரமேஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் டெல்லி, மராட்டியம், மேற்குவங்காளம், ஆந்திரா, ஜார்கண்ட், ஒடிசா என நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள சுமார் 14 பெண்களை வருடத்திற்கு ஒன்றாக மாறி மாறி திருமணம் செய்துள்ளார். டாக்டர் என்ற மதிப்பை பயன்படுத்தி ஆன்லைன் திருமண தகவல் மையங்களில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து மருத்துவர், வழக்கறிஞர், பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெண் என பல பேரை திருமணம் செய்துள்ளார்.
கல்யாண மன்னன் ரமேஷ். தொடர்ந்து இவரின் வலையில் விழும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணம் நகை உள்ளிட்டவற்றை லாவகமாக அடித்துவிட்டு மற்றொரு பெண் பக்கம் திரும்பி விடுவாராம். இதனையடுத்து ரமேஷ் குறித்து அவரால் திருமணம் செய்து ஏமாற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தொடர்ந்து புகாரின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் ரமேசை அசாம் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். காதலர் தினமான நேற்று கல்யாண மன்னன் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.