சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து, ரூ. 100. 13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ. 2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது.
இதே போன்று, மத்திய பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் காங்கிரசார் நடந்து சென்றும், டிராக்டர்களில் பேரணியாகச் சென்றும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதே போன்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எரிபொருள்மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அதனால் வரியைக் குறைக்க அரசு முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்