கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதனை தொடர்ந்து ஒப்பனக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றுமான சூழல் உருவாகியுள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாஜகவினர் குவிந்தனர். இதனையடுத்து கோவை பாஜக அலுவலக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள உள்ளனர்.
மேலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் எங்கள் சமூகப் பணியை மேலும் வலுப்படுத்தும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.