பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டு போராட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுடைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி வருகிறது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் கொஞ்சம் கூட அதை பொருட்படுத்தாமல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கையை மத்திய அரசு எதிர்ப்பு அலட்சியப் போக்குடன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆகையால் இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டு போராடுவதன் மூலமே மக்கள் பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.