பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது.பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரை ஏற்றி, பெங்களூரு நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கும் நோக்கில், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவியதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு பயணியரின் வரவேற்பு கிடைக்கவில்லை.இது பற்றி , மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய போது:பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணியரின் நேரம் சேமிக்கப்படும்.
போக்குவரத்து நெருக்கடி தொந்தரவும் இருக்காது, மேலும் செலவும் குறைவு. இதை மனதில் கொண்டு, சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பில், டிராவல் ஏஜன்சிகளுடன் சேர்ந்து நடத்த முடிவு செய்திருக்கிறோம்.பெங்களூருக்கு தினமும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலானோர் டூரிஸ்ட் பஸ்களிலேயே, சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். இனிமேல் மெட்ரோ ரயில்களில் அவர்களை சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்ல இருக்கிறோம்.
இந்த திட்டம், தொடக்க நிலையில் தான் இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் திட்டத்துக்கு இறுதி வடிவம் தரப்படும். இது, சுற்றுலா பயணியருக்கு உதவியாக இருப்பதுடன்,பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கும் வருவாய் கிடைக்கிறது. மெட்ரோ ரயில்கள் செல்லும் பாதையில் தான் விதான்சவுதா, லால்பாக், கப்பன் பூங்கா, மார்க்கெட் அருகிலுள்ள திப்பு கோடை அரண்மனை, ‘இஸ்கான்’ கோவில் போன்ற, பல இடங்கள் இருக்கிறது. மந்த்ரி மால், ஓராயன் மால் போன்ற பிரபலமான மால்களுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதால், ஷாப்பிங்குக்கும் உதவியாக இருக்கும்.எதிர் வரும் நாட்களில், மெட்ரோ ரயில் பாதை விஸ்தரிக்கப்படுகிறது. சர்வதேச விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படும். எனவே பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம், அதிக பலனளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.