பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் அவசர கால வழி திறக்கவில்லை.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அவர்களை வேறு வாகனத்தில் பெங்களூரு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.