மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் இந்த நிவாரணம் பயனுள்ளதாக இருக்கும்:
“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே” என்றார் திருமூலர்.
காற்றே முதல் மருந்து. காற்றின் அருமை பெருமைகளுக்கு காரணம் மூக்கு. மூச்சியக்கம் சரிவர இருந்தால் உடல் தன்மைத் தானே சரி செய்து கொள்கிறது. சளி (கபம்) மூச்சு இயக்கத்தை தடைப்படுத்துகிறது. இதனால் தொண்டை, இருதயம், நுரையீரலின் இயக்கம் பாதிக்கப்படும். எனவே மூக்கில் உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மருந்துகள் என்னவென்பதை தெரிந்து கொள்வோம்.
பூரசம் பட்டையின் கஷாயத்தை குளிரவைத்துச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்துப் பருக மூக்கில் வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
கரும்பு துண்டுகளை இடித்துப் புதிய மண்பானையில் வைக்கப்பட்டுள்ள நீரில் போட்டு, மலர்ந்த தாமரைப் பூவை அதன்மேலிட்டு இரவில் பாதுகாத்து வைத்திருந்து காலையில் வடிகட்டிப் பருகினால் மூக்கின் இரத்த கசிவு உபாதையில் இருந்து விடுபடலாம்.
சாதாரணத் தண்ணீர் பருகுவதற்கு பதில் சந்தனம், விளாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, திப்பிலி ஆகியவற்றை தண்ணீரில் இரவு ஊற வைத்து, காலையில் கசாயமாக பருகி வர மூக்கில் இரத்தக் கசிவை நீக்கிவிடும்.