பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் வயலில் கிடந்த காலியான மருந்து பாட்டிலை எடுத்துள்ளார்.
அதன் பிறகு சிறுவன் குடத்திலிருந்த தண்ணீரை பாட்டிலில் நிரப்பி குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கிரிசாமி தனது பேரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.