சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்சரண் தயாரித்திருப்பதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஆச்சார்யா படத்தை வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே பவன் கல்யாணின் பீம்லா நாயக், ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்.ஆர்.ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம், அல்லு அர்ஜுனின் புஷ்பா, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டிசம்பர் 17-ஆம் தேதி புஷ்பா படமும், ஜனவரி 7-ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படமும், ஜனவரி 14-ஆம் தேதி ராதே ஷ்யாம் படமும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆச்சார்யா படத்தை புஷ்பா படத்துடன் வெளியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் பிளானை படக்குழு மாற்றியுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ஆச்சார்யா திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.