ஜாக்கிசான் ஏப்ரல் 7, 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தார். ஜாக்கிசான் சிறந்த ஆக்ஷன் இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்பு கலைஞர், பாடகர் மற்றும் சண்டை கலைஞர் ஆவார். இவர் குங்ஃபூ தற்காப்புக் கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். பொதுவாக நடிகர்கள் மிகவும் கடினமான திரைப்பட காட்சிகளில் டூப் வைத்து எடுப்பது உண்டு. ஆனால் ஜாக்கிசான் தான் நடித்த திரைப்படங்களில் மிகவும் கடினமான சண்டை காட்சிகளில் டூப் வைக்காமல் அவரே நடித்துள்ளார்.
ஜாக்கிசான் சினிமாவே தேவை இல்லை என கூறிவிட்டு ஒருமுறை கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டன்ட்மேனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜாக்கிசான் புரூஸ்லீயுடன் இணைந்து நடித்துள்ளார். டிராகன் படத்தில் நடிக்கும் போது புரூஸ்லீக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. இதனால் புரூஸ்லீக்கு பதிலாக ஜாக்கிசான் அந்த பட காட்சியில் நடித்தார். புரூஸ்லீ இறப்பிற்கு பிறகு அவரது இடத்தை பிடிப்பதற்கு போட்டி போட்ட நடிகர்களுள் ஒருவர் ஜாக்கிசானும் ஆவார்.
ஆனால் ஜாக்கிசான் உள்பட அனைவரும் புரூஸ்லீ செய்ததை அப்படியே செய்துள்ளனர். அவர்கள் தனித்துவமாக எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் புரூஸ்லீயின் பெயரை அவர்கள் கெடுப்பதாக நினைத்த ரசிகர்கள் படத்தை பார்க்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜாக்கிசான் சினிமா வேண்டாம் என நினைத்து கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அதற்கு பிறகு தான் ஜாக்கிசான் ஆக்ஷன் காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜாக்கிசானின் படங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.