கொரானா தடுப்பு நடவடிக்கைகளின்படி புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் தற்காலிகமாக 93 சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேளிக்கை விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டம் முழுவதிலும் 93 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் 950 காவல்துறையினரை கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் கூச்சலிட்டுக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி ஆர்.சி கிறிஸ்தவ ஆலயம், என்.ஆர்.டி.நகர் சி.எஸ்.ஐ புனித பவுல் ஆலயம் போன்ற அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஏராளமானோர் கலந்துகொண்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து உள்ளனர். மேலும் தேனி கணேச கந்தபெருமாள் கோவில், பெத்தாட்சி விநாயகர் கோவில், போடி பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.