தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புத்தாண்டையொட்டி சென்னையில் 10,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள், செல்போன்கள் வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மெரினா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.