புது மின்இணைப்பு பெறும்போது வசூலிக்கப்படும் பல்வகை கட்டணத்தை உயர்த்த மின் வாரியம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் ஒரு முனை, மும்முனை பிரிவுகளில் மின்இணைப்பு கேட்டு செலுத்தக்கூடிய கட்டணம் அடுத்த இருமாதங்களில் இரு மடங்கு உயர்த்தப்பட இருக்கிறது. வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை போன்ற பிரிவுகளில் புது மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை வழங்கும்போது பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர்காப்பீடு, வளர்ச்சிக்கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளிட்ட பல்வகை கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடியது ஆகும். வளர்ச்சி கட்டணம், தரைக்கு அடியில் கேபிள், மின்கம்பம் மூலம் மின் வினியோகம் செய்வதற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.
தற்போது வீடுகளுக்கு ஒரு முனை இணைப்பு வழங்குவதற்கு பதிவுக்கட்டணம் 100 ரூ, மின் இணைப்பு கட்டணம் 500ரூ, மீட்டர் காப்பீடு 600ரூ, மின்கம்பம் உள்ள பகுதிகளில் வளர்ச்சிக் கட்டணம் 1,400ரூ, வைப்புத்தொகை 200ரூ என மொத்தம் 2,800ரூ வசூலிக்கப்படுகிறது. இது கேபிள் மூலம் மின் விநியோகிக்கும் பகுதிகளில் 6,400 ரூபாயாக இருக்கிறது. அதன்பின் மும்முனை இணைப்பில் பதிவுக்கட்டணம் 100ரூ, மின் இணைப்பு கட்டணம் 750ரூ, மீட்டர் காப்பீடு 2,700ரூ, மின் கம்பம் உள்ள பகுதிகளில் 1 கிலோ வாட்டிற்கு வளர்ச்சி கட்டணம் 1,000 ரூபாய், வைப்புத்தொகை 600 ரூபாய் என 5,150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவை கேபிள் மூலம் மின் விநியோகிக்கும் பகுதிகளில் 6,650 ரூபாயாக இருக்கிறது.
மின் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தக்கோரி மின் வாரியம், ஆணையத்திடம் அளித்த மனுவுடன் இந்த பல்வகை கட்டணத்தையும் உயர்த்திதர கோரியுள்ளது. அந்த வகையில் ஒருமுனை இணைப்புக்கான பதிவுக்கட்டணம் 200ரூ, மின் இணைப்பு கட்டணம் 1,000ரூ, மின் கம்பம் உள்ள பகுதிகளில் வளர்ச்சி கட்டணம் 2,300ரூ, கேபிள் உள்ள இடங்களில் 7,320ரூ, வைப்புத்தொகை 400 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோன்று மும்முனை இணைப்பில் பதிவுக்கட்டணம் 200ரூ, மின் இணைப்பு கட்டணம் 1,500ரூ, கம்பம் உள்ள பகுதிகளில் கிலோ வாட்டிற்கு வளர்ச்சி கட்டணம் 2,00 ரூ, கேபிள் உள்ள இடங்களில் கிலோ வாட்டிற்கு 5,000ரூ, வைப்புத்தொகை கிலோ வாட்டிற்கு 1,200 ரூ என உயர்த்தப்பட இருக்கிறது.
வீடுகளுக்கு ஆள்இல்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட இருப்பதால் அதன் விலையானது இறுதிசெய்யப்பட்ட பிறகு, பல்வகை கட்டணத்தில் மீட்டர்காப்பீட்டு தொகை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. மின்கணக்கீட்டு அட்டை தொலைத்த பிறகு, புது அட்டை பெறுவதற்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
மின்கட்டணம் செலுத்த காசோலை வழங்கி வங்கியில் தள்ளுபடி செய்வதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் 250 ரூபாயுடன் கூடுதலாக 300 ரூபாய் வசூலிக்கப்பட இருக்கிறது. மின்இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது. மீட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோன்று உயரழுத்த பிரிவிற்கு மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்களும் உயர்த்தப்பட இருக்கிறது. மின்வாரியம் தாக்கல் செய்துள்ள மனு குறித்து பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு இரண்டு மாதங்களில் செயல்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.