புதுடில்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தின் திறப்பு விழாஇன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் அறிஞர் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை கலைஞர் கருணாநிதி கட்டினார். ஒரு கட்சி அலுவலகத்திற்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ளது. இதைப்போன்று அறிஞர் அண்ணா அறிவாலயம் புது டெல்லியிலும் கட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் புதுடெல்லியில் இடம் ஒதுக்கப்பட்டு கட்சி அலுவலகம் கட்ட அனுமதி அளிக்கப்படும். கடந்த 2013-ம் ஆண்டு தி.மு.க விற்கு கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது தி.மு.க கட்சியின் அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது.
இந்த அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் மொத்தம் 3 தளங்கள் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் ஆலோசிக்கும் இடம், பொதுச் செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கான அறைகள், எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கான இடம் மற்றும் பொது நூலகம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த அறிஞர் அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.