ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முழுமையான ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது உரையை தமிழில் இரண்டாவது முறையாக ஆற்றியுள்ளார். புதுச்சேரி பேரவை வரலாற்றில் ஆளுநர் தமிழிழ் உரையாற்றுவது இரண்டாவது முறை என்று குறிப்பிடலாம். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி தனிநபர் வருமானம் பெருகியிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆளுநர் உரையில் இடம்பெற்ற எந்த ஒரு அம்சத்தையும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியையும், ஆளுநரோ, முதலமைச்சரோ பெற்று தரவில்லை என கூறி ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆளுநர் உரை முடிந்தவுடன் பேரவையானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேறு தேதியில் விவாதம் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் நாளை முதல் விவாதம் நடக்க இருந்த நிலையில் பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.