புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி உள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இருக்கிறார். ஆனால் இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பாக முதலாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தொடர்ச்சியாக ராஜினாமா செய்திருக்கிறார். புதுச்சேரியில் மொத்தம் மூன்று திமுக எம்எல்ஏக்கள் இருக்கக்கூடிய நிலையில் ஒருவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
அதற்கு அவர் கூறிய காரணம் தற்போது இருக்கக்கூடிய அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு புற அழுத்தம் என்பது எதுவும் கிடையாது என்பதை அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சியினரின் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரு, திமுகவில் இருந்து ஒருவரும் பதவி விலகியிருக்கிறார். இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றால் சபாநாயகர் ஓட்டு போடுவதற்கு தகுதி அற்றவராக இருப்பார். இந்த சூழலில் காங்கிரஸின் பலம் என்பது குறைவாகத்தான் இருக்கிறது.
இதனால் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பதவி விலகிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகி இருக்கிறார். அவர் பாஜகவில் சேருவதற்கு வாய்ப்பு கூட இருக்கலாம் என்று சொல்லப்பட்ட சூழல் தான் இருக்கின்றது.