புதுவை மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் பலனாக தினசரி தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் கடந்த 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.பெரிய மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 21-ந் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதன்படி புதுச்சேரியில் காய்கறி மற்றும் பழ கடைகள் அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி
அளிக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம்.அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம் உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது.