புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி, ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் சென்னை விமான நிலையத்திற்கு பிரேசில், நியூசிலாந்து, சீனா, ஹாங்காங்,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்த பின்னரே அனுமதி அளிப்பதாகவும் அவர் கூறினார். சென்னை விமான நிலையத்தில் இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த வகை தொற்று என்பது பரிசோதனை செய்த பின்னரே தெரியவரும் என கூறினார்.