உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று டெல்டா வகை கொரோனாவை விட அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றானது தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உட்பட 12 நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த நாடுகளை மத்திய அரசு high-risk நாடுகளில் பட்டியலில் வைத்துள்ளது.
இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக விமான நிலையத்தில் முறையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சோதனை முடிவுக்கு பின்னர் மீண்டும் வீட்டில் சென்று 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் 8-வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்துள்ளது.
அவை என்னவென்றால், நாட்டின் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் high-risk பட்டியலில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவரும் முன்கூட்டியே Airsuvidha இணையதளத்தின் மூலம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த முன்பதிவில் பயணிகள் தாங்கள் இதற்கு முன்னதாக 14 நாட்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த நடைமுறையினால் விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகளின் முழு விவரங்களும் தெரிந்து விடுவதால் அவர்கள் தயார் நிலையில் இருப்பதற்கு ஏதுவாக உள்ளது. பயணிகள் சோதனைக்கான கட்டணத்தையும் இணைய வழியிலேயே செலுத்தி விடுவதால் காத்திருக்க வேண்டிய நேரம் குறைந்துவிடுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.