பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ பொதுமக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் “தல்லுமலா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பின்போது படக்குழுவினர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
மேலும் இவர்கள் குப்பைகளை சாலையிலேயே போடுவதால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதுகுறித்து பொதுமக்கள் முதலில் பொறுமையாக கூறிப்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் கேட்காததால் பொறுமையை இழந்து படப்பிடிப்பு தளத்திற்கு மக்கள் விரைந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது டாம் சாக்கோ தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.