மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் ஏசி அதிக அளவு பயன்படுத்த வேண்டாம் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் 135 மின் ஆலைகள் உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த மின் தேவையில் 75 சதவீதம் பூர்த்தி செய்கின்றது. ஆனால் இந்த ஆலைகளில் இரண்டு நாட்கள் மட்டுமே தேவையான நிலக்கரி இருப்பதாகவும், இதனால் டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றது. ஆந்திராவில் மின் தடை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தேவையான நிலக்கரியை கொடுத்து உதவ வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநில செய்தித் துறை செயலாளர் ஸ்ரீகாந்த் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் நாடெங்கிலும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்ற நேரங்களில் ஏசி பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக 10 மில்லியன் யூனிட் மின்சாரம் வரை சேமிக்க முடியும் என்றும், மின்வெட்டை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.