பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த கட்டுமான நிறுவனம் விரைவில் திறப்பு விழா நடத்தி பொதுமக்களின் புழக்கத்திற்காக திறந்துவிட இருந்த நிலையில், அதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்துள்ளது. இப்பாலத்தின் பகுதி முழுவதும் உடைந்து ஆற்றில் விழுந்து உள்ளது. 206 மீட்டர் நீளம் உள்ள இந்த பாலம் முதல்வர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் சென்ற 3 நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இப்போது இப்பாலம் முழுவதும் உடைந்து ஆற்றில் மூழ்கியது. பாலம் கட்டும் பணி முடிந்துவிட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் பாலத்தை ஆய்வு மேற்கொள்ள பொறியாளர்கள் குழு ஒன்று நேற்று வரவழைக்கப்பட்டது. பிறகு பொறியாளர்கள் பாலத்தை காப்பாற்றுவதற்கு சில ஆலோசனைகளை வழங்கினர். எனினும் இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணி பிப்..23, 2016 அன்று துவங்கி 2017 ஆகஸ்ட் 22-க்குள் ஒரு வருடத்தில் முடிந்தது. இருப்பினும் இந்த பாலம் 5 ஆண்டுகளாக திறப்பு விழாவிற்காக காத்திருந்தது..