குழந்தை தொட்டிலில் தூங்கிய போது உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29-ஆம் தேதி பவித்ராவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் தொட்டிலில் தூங்க வைக்கப்பட்ட குழந்தை அசைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பவித்ரா உடனடியாக தனது குழந்தையை கருல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிறந்து 12 நாட்களில் குழந்தை எப்படி இறந்தது என்பதை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.