தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனமடைந்ததாக கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் இருந்து வருகிறோம், ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி ‘கிங்’காகத்தான் இருக்க வேண்டும். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் தொண்டர்களின் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ” தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனித்துப் போட்டியிடுவது குறித்து தெரிவித்துள்ளாரே? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்த கூட்டணி தொடர்ந்து வருகிறது என்பதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில காலம் இருக்கின்றது. அவர்கள் கட்சியின் கருத்தை அவர் கூறுகின்றார். அந்தக் கருத்தை கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கை மற்றும் லட்சியம் இருக்கின்றது. அதனை அவர்கள் வெளிப்படுத்த தான் செய்வார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய சூழலில் தான் அதிமுக கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலின் போது தான் கூட்டணி பற்றி எந்த கருத்தையும் சொல்ல முடியும். தற்போது கூட்டணியில் எந்தவித பிரச்சனையும் கிடையாது.
அதிமுக ஒரு மாபெரும் இயக்கம் என்பதால், அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு கடினமாக உழைப்போம். எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்தில் இருந்த பலத்துடன் அதிமுக தற்போது உள்ளது. ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துகளை கூறலாம். பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனம் அடைந்ததாக கூற முடியாது. எங்களின் தலைமையில்தான் கட்டாயம் கூட்டணி அமையும். சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவை அனைத்தும் சரியாகிவிடும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.