Categories
மாநில செய்திகள்

பிரியா மரணமடைந்தது எப்படி?…. “6 வாரத்திற்குள் பதில் வேண்டும்”…. மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலருக்கு எழுதியுள்ள அறிக்கையில், பிரியா மரணம் தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த கால்பந்து வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரம்? என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது? அவர் மரணமடைந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க தவறினால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும். அந்த ஆறு வாரங்களுக்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலருக்கு இந்த கடிதத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மரணம் :

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வலது மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சி இழந்ததால்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கால் வீங்கியிருந்தது. எனவே உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரின் வலது காலை அகற்றினர். பிரியாவின் கால் அகற்றப்பட்டதற்கு காரணம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறாக தவறான சிகிச்சை தான் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையை சேர்ந்த 2 மருத்துவமர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் உடல்நிலை மோசமான நிலையில் நேற்று காலை 7:15 மணியளவில் உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பலியான பிரியாவின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மேலும் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Categories

Tech |