வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனையின் முடிவில் பழனிச்சாமி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக தெரியவந்ததையடுத்து, இதனை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து பழனிச்சாமி தியாகதுருகம் பகுதியில் ஒரு பெண்ணுடன் பிரியாணி வாங்கி சென்றது அந்தக்கடையிலுள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் சென்ற பெண் யார்? என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில், அவர் உளுந்தூர்பேட்டையிலுள்ள இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலையின் மனைவி கோமதி (37) என்று தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையிடம் சிக்கிய கோமதி, அளித்துள்ள வாக்குமூலத்தில், “பழனிச்சாமிக்கும், எனக்கும் ரொம்ப நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் பிரியாணி வாங்கி கொண்டு தியாகதுருகம் ஏரிக்கரைக்கு சென்று தனிமையில் இருந்தோம். அப்போது போதையில் இருந்த அவர் என்னை உதைத்ததால், எங்களுக்குள் சண்டை வந்தது. எனவே ஆத்திரமடைந்த நான் அவர் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தேன். மேலும் அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்து சென்றேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் கோமதி மீது இதுபோன்ற ஏராளமான பாலியல் வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.