ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றார்கள்.
இதனை அந்த நாட்டு தினசரி பத்திரிகையான லே பிகாரோ கூறியுள்ளது. மேலும் காட்டுத்தீயானது ஆர்டிச் ஆற்றை ஒட்டிய நிலப் பகுதிகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. அது ஓக் நகரை நோக்கி பரவிக் கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் தீயை அணைக்கும் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் எனினும் லாவில்லேடியு பகுதியில் தொழில் மண்டலங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காட்டுத்தீயை அணைப்பதற்கு 500 தீயணைப்பு வீரர்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் காட்டுத்தீயை கட்டிற்குள் கொண்டுவர வான்வழியே தீயை அணைக்கும் அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என லே பிகாரோ கூறியுள்ளது. இந்த காட்டுத்தீயினால் அதனை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் பல்வேறு சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றது. மேலும் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. தென் கிழக்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் அகோர பிடியில் சிக்கி 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து போய்விட்டது.