காய்கறிகளை வாங்கும் போது தரமானதாக, பிரஷ்ஷாக வாங்குவது எப்படி என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். பிரஷ்ஷான காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கருப்பாக இருக்கக்கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காய் குடுமி ஈரமாக இருக்கக்கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும்.
வெங்காயம் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அதை அழுத்தி பார்க்கவேண்டும். ஈரப்பதம் இருக்கக்கூடாது. நன்றாக காய்ந்து இருந்தால்தான் வெங்காயம் நீண்ட நாட்கள் வரும்.
வாழைக்காயை உடைத்தால் வெள்ளையாக இருக்க வேண்டும். இது சற்று இளசாக இருந்தாலும் அதை பயன்படுத்தலாம். பஜ்ஜிக்கு வாங்குவதாக இருந்தால் முற்றியதாக பச்சை நிறத்தில் வாங்க வேண்டும்.
முருங்கக்காய் வாங்குவதாக இருந்தால் முற்றிலும் பச்சையாக வாங்க வேண்டும். முருங்கக்காய் சற்று பருமனாக இருக்க வேண்டும். நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள் கலந்த காய்கறி விதைகள் வெளியே தெரிந்தால் அது முற்றிய காய் என்று அர்த்தம்.
பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் உடைத்தால் வெடுக்கென்று உடையக்கூடும். இப்படி இருந்தால் சமையலுக்கும் ஏற்றது ருசியாகவும் இருக்கும்.
தக்காளியை பார்க்க கெட்டியாக உருண்டையாக பார்த்து வாங்க வேண்டும். காம்புக்கு அருகே பச்சையாகவும் அடிப்பாகம் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
கத்தரிக்காய் காம்பில் முள் இருந்தால் அது பிரஷ்ஷான காய் என்று அர்த்தம் .கத்திரிக்காய் பச்சை நிறமாக இருந்தால் அதன் மேல் வரிகள் இருந்தால் அவை கசப்பாக இருக்கும்.
முட்டைகோஸ் வாங்கும்போது அதன் காம்பு இருக்குமிடத்தில் முகர்ந்து பார்க்கவேண்டும். பழையதாக இருந்தால் முகர்ந்து பார்க்கும் போது நாற்றமடிக்கும். புதியதாக இருந்தால் நாற்றம் அடிக்காது.
பிட் பீட்ரூட் மெல்லிய தோலுடன் இருக்கவேண்டும். தோல் கடினமாக இருக்கக் கூடாது. நகங்களைக் கொண்டு கீறினால் பலபலவென்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்கவேண்டும்.
பச்சை மிளகாயில் காம்பு காய் இரண்டுமே பச்சையாக இருக்க வேண்டும். காம்பு சுருங்கி இருந்தால் கருத்து இருந்தால் அது பழையது.
உருளைக்கிழங்கு கெட்டியாக இருக்கக் கூடாது. பச்சை நிறம் வெளியில் தெரியக்கூடாது.தோல் கிழங்காக இருந்தால் தோல் பளபளப்பாக இருக்க வேண்டும்.
கருவேப்பிலை இலை மிக சிறியதாக இருக்கவேண்டும். மெல்லியதாக, நீண்டதாக இருக்கும் இலைகளில் அதிக மணம் இருக்காது. கொத்தமல்லி கீரை பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் வாங்க வேண்டும்.