பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ள நிலையில் ராக்கெட் ராஜாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவல்லடியில் நேற்று இரவு மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்றைய தினம் பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிரொலியாக தீ விபத்து சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கைது செய்யப்பட்ட ராக்கேட் ராஜா வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்..