அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர் வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பேருந்துக்குள் இருந்த மாணவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்குதல் நடத்திய அந்த மாணவரை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.