நடிகை நிலா வீட்டு உள் அலங்கார நிபுணர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அன்பே ஆருயிரே, மருதமலை, ஜாம்பவான், லீ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நிலா . மேலும் இவர் தெலுங்கு, பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரில் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியில் நிலா புதிதாக வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகள் செய்வதற்காக இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு, முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற நிலா, 15 நாட்களுக்கு பின் புதிய வீட்டை பார்க்க திரும்பி வந்துள்ளார். அப்போது தரம் குறைந்த, மலிவான பொருட்களை வைத்து உள் அலங்கார வேலைகள் செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதனால் உள் அலங்கார நிபுணர் ராஜிந்தருக்கும், நிலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய நிலா ‘மலிவான, தரம் குறைந்த பொருள்களில் உள் அலங்காரம் செய்திருப்பதை பற்றி கேட்டபோது, இப்படி கேள்வி கேட்டால் வேலை செய்யமாட்டேன் என மிரட்டினார். என்னை எனது வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டார். என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார்’ என தெரிவித்துள்ளார். மேலும் மும்பை காவல் நிலையத்தில் ராஜேந்தர் மீது நிலா புகார் அளித்துள்ளார் . தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.