நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமாஸ் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் யானை படத்தில் பாம்பன் பகுதி, தங்கச்சிமடம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களை சமூகவிரோதிகளாகவும், கூலிப்படையினர்களாகவும், குழந்தைகளை தவறான முறையில் பயன்படுத்துவர்களாகவும் சித்தரித்துள்ளனர். இந்த படத்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. எனவே யானை படத்தை திரையிடுவதற்கு தடை விதிப்பதோடு, படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, யானை படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என தணிக்கை குழுவுக்கு மனு எழுதி அனுப்புங்கள் என்று நீதிபதி கூறி வழக்கை முடித்து வைத்தார்.