நாராயண் தாஸ் நரங் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த இவர் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்யுள்ளார்.40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார் நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி நாக சௌர்யாவின் லக்ஷ்யா போன்ற படங்களை தயாரித்திருந்தார் இவர். மேலும் நாகார்ஜுனா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் தி கோஸ்ட் திரைப்படம் மற்றும் தனுஷ், சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படங்களும் அவரது வரிசையில் இருந்தது. இந்தநிலையில் வயது மூப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண் தாஸ் நரங் ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரை பிரபலங்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவர் வெளியிட்ட பதிவில், எங்களின் அன்புக்குரிய தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் சிங் தாஸ் மரணமடைந்த தகவலை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். சுனில் நரங் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருக்கிறார்.