கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ரோஹித் சர்மா சார்பில் 80 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதேபோல, பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நிலக்கரி மற்றும் சுரங்க நிறுவனம் சார்பில் ரூ.245 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மேலும் COVID19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண நிதிக்கு (PMCARES) தானாக முன்வந்து வழங்க முடிவு செய்துள்ளனர்.