பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க. துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.
அதிமுகவை வழிநடத்துகின்ற தலைமை பொறுப்பு உள்ளது என தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆர். ஆல் வழங்கப்பட்டது. தொண்டர்களால் தேர்தல் முறையில் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்குவதனால் இந்த அடிப்படை சட்டவிதி கொண்டுவரப்பட்டது. பொதுக்குழுவின் தீர்மானங்கள் மூலமாக பல்வேறு விதிகள் உருவாக்குவதும் திருத்தங்கள் கொண்டுவருவரவும் முடியும்.
ஆனால், பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை மட்டும் எந்த சூழ்நிலையிலும் மாற்றக்கூடாது என்பது தான் அதிமுக விதியில் இருக்கின்ற அடிப்படை உரிமை. எனக்கு துணை முதல்-அமைச்சர் பதவியோ அமைச்சர் பதவியோ நான் உரிமைகோரவில்லை எனக்கு தேவையில்லை. 2 முறை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நான் முதல்-அமைச்சராக்கப்பட்டவன். துணை-முதல் அமைச்சர் என்பது அதிகாரமற்ற பதவி. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சராக நான் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
எந்த ஒரு அதிகார ஆசையும் கொண்டவன் நான் அல்ல. அதிமுக தொண்டர்களிடம் இருந்து என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுக் குழு கூடுவதற்கு முன்பாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்தப் பிரச்சினையும் வராது. எந்த காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடைய கூடாது. ஈபிஎஸ் உடன் பேச நான் தயார். நானும் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து பேசி ஒற்றை தலைமை பற்றி பேசியவர்களை கண்டிக்க வேண்டும். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை” என்றார்.