ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறுவதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்பட்டது.
அது மட்டுமல்லாமல் தினந்தோறும் காலையில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். இதனை தொடர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி இரவு 8 மணிக்கு காட்டூர், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பக்தர்கள் மாவிளக்கு எடுத்து மேளதாளங்களுடன் கோவிலுக்கு வருவார்கள். அதன் பின் 3 ஆம் தேதி காலை பொங்கல் விழா நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு செல்வர். அன்று இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் 4 ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்று விழா நிறைவடையும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.