பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜூலை 28-ஆம் தேதி ஆடி அமாவாசைக்கான சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1800 காவலர்களும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 800 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிறகு ஏராளமான வனத்துறையினரும், 140 தீயணைப்பு வீரர்களும் நீரோடைகள், மலைப்பாதைகள் மற்றும் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக வருவதால் தேனி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷ விழாவை முன்னிட்டு சதுரகிரிநாதருக்கு பால், பயிர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.