மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகாமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில் பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாட்களான 13-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி இரண்டாவது காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் “பாடை காவடி” பால் குடம், சேவல் காவடி ஆகியவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். மேலும் கோவிலின் எதிரே அமைந்துள்ள மரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட செம்பரி ஆட்டை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.