பிரசித்தி பெற்ற கோவிலின் கண் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டிதேவி பகுதியில் உள்ள பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 19-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ம் தேதி பூக்குழி இறங்குதல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது 36 அடி நீளம் கொண்ட குண்டமானது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி லட்சார்ச்சனை, 23-ஆம் தேதி கிராம சாந்தி பூஜை, 24-ஆம் தேதி கொடியேற்றம், 25-ஆம் தேதி பொங்கல் வைத்தல் மற்றும் திருக்குண்டம் திறத்தல், 26 ஆம் தேதி அம்மன் அழைப்பு, 27-ஆம் தேதி மாவிளக்கு மற்றும் பூ பல்லக்கில் அம்மன் வீதி உலா, 28 ஆம் தேதி அமாவாசை சிறப்பு பூஜை, 29-ஆம் தேதி மகா அபிஷேகம் மற்றும் அம்மன் மஞ்சள் நீராடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் 2-ம் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.