பிரசித்தி பெற்ற கோவிலில் பல வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சுவாமியை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு பறிபோனது.
இந்த கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் 7 வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.